Wednesday, March 26, 2014

நமது மனம் எதனால் எப்பொழுதும் புலன் வழியே வெளியில் செல்வதிலேயே நாட்டமுடையதாக இருக்கிறது ? காரணம் என்னவாக இருக்கும் ? நம் மனதிற்கு தெரிந்த காரணம்தான். ஆனால், அதை நம் மனம் அறியாதபடிக்கு அவித்தை எனும் அஞ்ஞான இருள் மறைத்துக் கொண்டிருக்கிறது. பரம்பொருள் நம் உடலில் ஜீவாத்மாவாக நின்று மனம் வழியாகவே இயங்குகின்றது. எனவே நம் ஜீவனானது இயல்பாகவே பரமாத்மாவை அடைய வேண்டும் என்ற நாட்டம் கொண்டதாகவே இருக்கிறது. அதனால் நான் என்ற எண்ணத்தில் மட்டும் திளைத்திருந்த ஜீவனானது எண்ணம், சித்தம், புத்தி, மனம் என்று ஜட நிலைக்கு வந்து வெளியில் இந்த அண்டசராசரமெங்கும் பரவி நிற்கும் பரம்பொருளை அடையத் துடிக்கிறது. அந்தோ பரிதாபம், ஜடநிலைக்கு வந்த மனதால் சூக்கும நிலையில் எங்கும் நீக்கமற நிரம்பி நிற்கும் பரம்பொருளை உணரக் கூட முடியவில்லை. மேலும் புலன் வழியே இயங்கும் போது நுகரும் அற்ப சுகங்களை நிரந்தரமென்று கருதி அதிலேயே உழன்று கொண்டும் இருக்கிறது. அதனால்தான் நம் குறைகளை நம்மால் உணர முடியாமல் போய் விடுகிறது. ஓரளவேனும் உலகாயத்தில் மனம் ஒரு நிலைப்பட்டு செயல்படும் போதுதான் மனிதன் தன்னிலையை சிறிதளவேனும் உணர்கிறான்.

நன்றாகக் கவனித்துப் பார்த்தால் ஓவியர்கள், கவிஞர்கள், சிற்பிகள், மந்திரம் ஓதுபவர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், கர்மவீரர்கள் போன்ற மனதை ஒருநிலைப்படுத்தி காரியமாற்றுபவர்கள் புத்தி கூர்மை உடையவர்களாக விளங்குவதைக் காண முடியும். காரணம் என்னவென்றால், எண்ணங்களைச் சிதற விடாமல் ஒரே நோக்கத்தோடு விளங்குவதால் இயல்பாகவே மனவலிமையும், சலனமற்ற நிலையும் வாய்த்து விடுகிறது. இப்படிப்பட்டவர்கள் உள்முகமாக மனதைச் செலுத்தினால் மனம் எளிதில் வசப்படும். அதனால்தான் நம் முன்னோர்கள் எந்த ஒரு காரியத்தைச் செய்தாலும் ஒரே மனதோடு, கவனமாக, முனைப்போடு செய்ய வேண்டும் என்று அடிக்கடி சொல்லிக் கொள்வார்கள். இந்த நிலை நீடித்தால் என்றேனும் ஒருநாள் இத்தகையவர்களுடைய மனம் அடங்கி உண்மை வசப்பட்டு விடும். அப்படி மனம் தெளிந்து அஞ்ஞான இருள் விலகி உண்மை வசப்பட்டவர்களையே மகான்கள் என்றும், ஞானிகள் என்றும், மேதைகள் என்றும் நாம் சொல்கிறோம். எனவே புறவுலகில் மனதை அமைதிப்படுத்தி, வசப்படுத்திய பிறகே உள்முகமாக செலுத்த வேண்டும், செலுத்த முடியும் என்பது புலனாகிறது.

மனம் என்பதே நம் எண்ணங்களின் மொத்தத் தொகுப்பேயன்றி வேறல்ல. வாழ்க்கை என்பதே எண்ணங்களின் பரிமாற்றம்தான். எண்ணங்கள் குறையக் குறைய மனம் மறைந்து கொண்டே வரும். அது நான் என்ற நிலையில் போய் நிலைத்து நிற்கும் வரை, தேரை இழுத்துக் கொண்டேயிருக்க வேண்டியது நம் கடமை. தேரைக் கொண்டு போய் நிலையத்தில் நிறுத்தும் வரை முயற்சி தொடரும். எனவே எண்ணம்தான் உண்மையான செயலாகும். முதலில் அது மனதில் நடைபெறுகிறது. பிறகு உடலளவில் நடைபெறுகிறது. உடலளவில் நடைபெறும் செயல்களெல்லாம் மனதளவில் நடைபெற்ற எண்ணம் என்ற செயலின் விளைவுகளேயாகும். இதில் புனிதமான எண்ணங்கள் மேலும் மேலும் எண்ணங்களை வளர்ப்பதில்லை. அவை மனதில் தெய்வீகத் தன்மையை உருவாக்கி, தெய்வீக எண்ணங்களைத் தோற்றுவித்து ஒரு எல்லைக்கு மேல் வளராமல் நிலைத்திருக்கச் செய்கின்றன. அதற்கு மேல் ஒன்றுமில்லை. எனவே அங்கே தேங்கித், தங்கி விடுகின்றன. ஆனால் உலகாய எண்ணங்கள் அவ்வாறல்ல. அது ஒன்றிலிருந்து ஒன்று என்று முடிவேயில்லாமல் போய்க் கொண்டே இருக்கும். புறவுலக விவகாரங்களைப் பொருத்த வரை ஆசைக்கு அளவே இல்லை. இவ்வாறான கோடானுகோடி ஆசைகளைச் சுமக்க முடியாமல் சுமந்து கொண்டு அங்குமிங்கும் ஓடி அலைந்து கொண்டிருக்கும் மனம் தன் வலிமையை இழந்து தவிக்கிறது. எண்ணங்கள் குறையக் குறையத்தான் மனம் சிதறலடையாமல், குவிந்து, ஒருநிலைப்பட்டு, வலிமை பெற்றுத் திகழும். எண்ணங்களைக் குறைத்துக் கொள்ளும் அளவுக்கு ஒருவன் இலக்கை நோக்கிப் பயணிக்கிறான் என்பதே உண்மை.

இதற்க்கான எளிய உபாயமாகவே பக்தி என்ற ஒரு நிலை முன்னோர்களால் உருவாக்கப்பட்டது. அதாவது உள்முகமாகப் பயணிக்கும் முன் யோக சாதகர்களின் முதல் படியாக பக்தி அமைகிறது. பக்தியினால் மனதில் அசைக்க முடியாத நம்பிக்கையை வளர்த்துக் கொண்டு, அயராத மெய்த் தொண்டினால் எல்லாவற்றிலும் இறைவனைக் காணும் பக்குவ நிலையை அடைந்து, பிறகு வைராக்யம், விடா முயற்சியுடன் தியானப் பயிற்சியில் ஈடுபட்டு, ஞானம் அடைய வேண்டும் என்பது கோட்பாடு. இதற்காகவே இயமம், நியமம் கடை பிடிக்கச் சொல்கிறார்கள். அது நமக்கு தியானத்தை கூட்டி ஜோதியைக் காட்டுவிக்கும். எனவே தவம், சமாதி போன்ற பேரின்ப நிலைகளைப் பெற்று நிலைத்து நீடித்திருக்க அஸ்திவாரமாக பக்தி விளங்குகிறது. பல நிலைகளில் கடைபிடிக்கப்படும். பக்தியால்தான் நாம் பேராற்றலாகிய பரமாத்மாவோடு பிணைக்கப்படுகிறோம். சரியையில் அது வைராக்ய பக்தியாகவும், கிரியா நெறியில் அசைக்க முடியாத நம்பிக்கையோடு கூடிய பக்தியாகவும், யோக நிலையில் குருபக்தியாகவும், ஞான நெறியில் மெய் பக்தியாகவும் வளர்ந்து, இறுதியில் இறவா நிலையும், இறை நிலையும் அடையவும் பக்தியே காரணமாக இருக்கிறது. மற்றவர்களுக்காக செய்து காட்டுவதல்ல பக்தி. நம்காக நம் பிறவி ஈடேற கொள்வதுவே பக்தி.
இதனை உலகுக்கு உணர்த்தவே, நால்வர்களும், நாயன்மார்களும், ஆழ்வார்களும், ஞானிகளும், சித்தர்களும் அத்தகைய வாழ்வினை வாழ்ந்து காட்டி விட்டு சென்றிருக்கின்றனர்.

No comments:

Post a Comment