Monday, March 31, 2014

பிரபஞ்சத்தைப் பற்றிய உண்மை இதுவே

பிரபஞ்சத்தைப் பற்றிய உண்மை

கடவுள் ஒருவரே அனைத்திற்கும் காரண கர்த்தா என்னும் கோட்பாட்டை நாம் புத்தகத்தில் படிக்கிறோம். பிறர் சொல்லக் கேட்கிறோம். நம்முடைய அனுபவத்தில் நாம் காணும் காட்சி இதுவன்று. முதலில் கடவுளை நாம் கண்டாகவேண்டும். கடவுளுக்கும் உலகுக்கும் உள்ள தொடர்பை அனுபூதி வாயிலாகத் தெரிந்தாக வேண்டும். அதன் பிறகு இக்கேள்வியை விமர்சனம் செய்கிறவிடத்துக் கடவுளின் ஆணையின்றி இப்பிரபஞ்சத்தில் எதுவும் நிகழ்வதில்லை என்பது நமக்குக் கண்கூடாக விளங்கும்.

இப்பொழுது நாம் உள்ள நிலையில் நம் செயலுக்கு நாமே கர்த்தா. அவரவருடைய மனப்பான்மைக்கு ஏற்ப நாம் கர்மம் புரிந்து வருகின்றோம்.ஆற்றங்கரையில் சாது ஒருவர் உட்கார்ந்திருந்தார். பிரவாகத்தில் தேள் ஒன்று மிதந்து கொண்டு வந்தது. ஐயோ பாவம் என்று அதைக் காப்பற்றக் கையில் அள்ளி எடுத்தார். நீர் கீழே போன பிறகு கையிலிருந்த தேள் அவர் கையைக் கொட்டியது. உடனே கையை உதறினார். பழையபடி தேள் நீரில் விழுந்தது. திரும்பவும் அதன் மீது இரக்கம் கொண்டு நீரோடு அள்ளி அதை வெளியில் எடுத்தார். இரண்டாம் தடவை அது கொட்டியது. கையை உதறினார். தேள் தரையில் விழுந்து நகர்ந்து போய் விட்டது.

கஷ்டத்திலும் சாது தன் இயல்பைக் காட்டினார். காப்பாற்றப் பட்ட நிலையிலும் தேள் தன் இயல்பைக் காட்டியது. இங்கு அவரவர் செயலுக்கு அவரவர் கர்த்தா. தன் இயல்புக்கேற்பத் திருடன் களவாடுகிறான். கொலைபாதகன் மற்றவர்களைக் கொல்கிறான். நம் காட்சியில் வைத்துப் பார்க்குமிடத்து அவரவர் இயல்புக்கும் பரிபாகத்துக்கும் ஏற்ப உயிர்கள் நலன்களையும் கேடுகளையும் செய்து வருகின்றன.

பிரபஞ்சத்தின் நடைமுறை முழுவதையும் நாம் அறிந்திருந்தாலும் அறியாதிருந்தாலும் எல்லாம் கடவுளின் திட்டமே, கடவுளின் விளையாட்டே. நல்ல நாடகம் ஒன்றில் விதவிதமான பாத்திரங்கள் இருக்க வேண்டும். நடிப்பவர்கள் எல்லாரும் நல்லவர்களாக இருந்து விட்டால் நாடகத்தில் சுவை இராது. பிரபஞ்சம் என்கின்ற நாடகத்தில் எண்ணிறந்த இயல்புடைய உயிர்வகைகள் இருக்கின்றன. இந்தப் பெரிய திட்டத்தில் களவுக்கும், கொலைக்கும், வஞ்சகத்துக்கும், நோய்க்கும், பஞ்சத்துக்கும், போராட்டத்துக்கும் இடமுண்டு. சாந்தத்துக்கும், அன்புக்கும், ஜீவகாருண்யத்துக்கும் இங்கு இடமுண்டு. நலம், கேடுகள் ஆகிய எல்லாச் செயல்களுக்கும் ஈசுவர சிருஷ்டியில் இடமுண்டு; ரோஜாச் செடியில் அழகிய பூ இருப்பது போன்று கொடிய முள்ளும் இருக்கிறது.

பிரபஞ்சத்தைப் பற்றிய உண்மை இதுவே. கொடிய செயல்களும் பிரபஞ்சத்தின் பெரிய திட்டத்தில் தகுந்த இடம் பெற்றிருக்கின்றன. பிரபஞ்ச நடைமுறைக்கு அவைகள் முற்றிலும் அவசியமானவைகள். பசுவின் மடியில் பால் இருப்பதும் பிரபஞ்ச நடைமுறைக்குத் தேவை. பாம்பின் பல்லில் விஷம் இருப்பதும் பிரபஞ்சத்தின் நடைமுறைக்குத் தேவை. நமது முன்னேற்றத்துக்குத் தீமைகளும் மறைமுகமாகத் துணைபுரிகின்றன என்பதை நாம் அறிந்து கொண்டால், கொலைபாதகர்களைக் குறித்தோ, திருடர்களைக் குறித்தோ, வஞ்சகர்களைக் குறித்தோ நாம் மதிமயக்கம் கொள்ள மாட்டோம். அவர்களைக் கையாள்வது எப்படி என்பதிலும் தெளிவாக இருப்போம்.

No comments:

Post a Comment