
அதைக் கண்ட அர்ஜுனன் இது என்ன அஸ்திரம் குருவே, எனக்கு இந்த வித்தையை நீங்கள் கற்றுத் தரவில்லையே என்று கேட்டான். நான் சொன்னேன் எனக்கு இது தெரியாது. இது யாருக்கும் நான் கற்றுத் தந்த வித்தையல்ல என்று. பிறகு அனைவரும் நாயை முன்னே அனுப்பி பின் தொடர்ந்து அது யார் என்று தேடிப் போனோம். அங்கேதான் ஏகலைவன் என் சிலையை வைத்து பூஜை செய்து வித்தைகளைக் கற்றுக் கொண்டிருந்தான். அவன் ஏற்கனவே என்னிடம் வித்தை கற்றுத் தரும்படி கேட்டு வந்திருந்தான். நான் தம்பி ஒரு வேடனுக்குத் தேவையான அனைத்து வில் வித்தைகளும் உனக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. அது போதும். நான் அரச குமாரர்களுக்கு மட்டுமே கற்றுத் தருவேன் என்று சொல்லி அனுப்பி வைத்தேன். அதற்குப் பிறகே அவன் என் சிலையை வைத்து மானசீகமாக குருவாகக் கொண்டு பூஜைகள் செய்து எல்லா வித்தைகளையும் அடைந்திருக்கிறான். அவன் குரு பக்திக்கு நிகர் எவருமேயில்லை. ஆனால், தெய்வங்களிடம் தவமிருந்து வரமாகப் பெற்ற அஸ்திர வித்தையை கேவலம் ஒரு நாயிடத்தினில் ஏவி விடுகிறான் என்றால், அந்த வித்தைக்குத்தான் என்ன மதிப்பிருக்க முடியும் ? அது ஒரு கல்லை வீசினால் ஓடி விடும். ஒரு கம்பை கையிலெடுத்தால் காணாமல் போகும். அதனிடத்தில் போய் அவன் உயர்ந்த அஸ்திர வித்தையைக் காட்டிய காரணத்தினால் இத்தகைய உயர்ந்த அஸ்திரங்களை கையாளுவதற்கு அவன் தகுதியற்றவன் என்பதை உணர்ந்து வேறு வழியில்லாமல் அவன் கட்டை விரலைக் குரு காணிக்கையாகக் கேட்டேன்.
எனவே வித்தைகள் யார் கைகளில் இருக்க வேண்டுமோ அவர்களிடம்தான் இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் அந்த வித்தைகளுக்கு மதிப்பு. இதற்கான மூலக் காரணம் என்னவென்றால், குரு வித்தைகளைக் கற்றுத் தருவதற்கு முன் தரும் மனப் பயிற்சிகளை அவன் அறிந்திருக்கவில்லை. அவன் தனது சிறந்த குரு பக்தியால் நேரடியாக வித்தைகள் கைவரப் பெற்று விட்டான். அவற்றைக் கையாளக் கூடிய உயர்ந்த நோக்கமும், பண்பும் அவனிடத்தில் இல்லை. ஒரு வேடனுக்குரிய கொடிய இயல்பே அவனிடத்தில் நிறைந்திருந்தது. எனவே பக்குவமில்லாத அவனிடத்தில் வித்தைகள் இருப்பது மற்றவர்களுக்கு மட்டுமல்ல, அவனுக்கே ஆபத்தாக முடிந்து விடும். என்று சொல்லி கர்ணனை அனுப்பி வைத்தார். இதை எதற்காகச் சொல்கிறேன் என்றால், என்னிடம் சிலர் கேட்கிறார்கள், நேரடியாக யோகம், ஞானம் என்று போய் விட வேண்டியதுதானே ? எதற்கு சரியை, கிரியை போன்றவைகளெல்லாம் என்று. வில் வித்தையைப் போல இதற்கு குலம் கோத்திரம், வர்ணமெல்லாம் கிடையாது. எல்லோரும் பரம்பொருளை அடையத் தகுதியானவரே. ஆனால், அதற்கான மனப்பக்குவத்தையும், நல்லொழுக்கத்தையும் உடையவராக இருக்க வேண்டியது அவசியம். அல்லாத பட்சத்தில் என்னதான் குரு தொட்டவுடன் சக்தி மேலேறினாலும், அவர் அந்தப் பக்கம் போனவுடன் சர்ரென்று கீழே இறங்கி விடும். எனக்கு ஏறி விட்டது, எனக்கு ஏறி விட்டது என்று சொல்லிக் கொள்ளலாம் அவ்வளவுதான். அதன் மூலம் தன்னை கொஞ்சம் பிரபலப்படுத்திக் கொள்ளலாம். இன்னும் கொஞ்சம் பொருளீட்டலாம். ஆன்மிக மேம்பாடு என்பது இதுவல்ல.
எனவே சாதகன் சரியை என்கிற சதாச்சாரத்தை, நல்லொழுக்கத்தை கடைபிடிப்பவனாக இருக்க வேண்டிது மிக அவசியமாகும். அது போலக் கிரியை என்பது கடமைகள். மேலான கடமைகள். நாம் உலகாயத்தில் சில விஷயங்களை நம் தலையாய கடமைகள் என்று சொல்லிக் கொண்டு அலைகிறோம். அதுவல்ல இது. வகுக்கப்படுள்ள, அங்கீகரிக்கப்பட்டுள்ள உயர்வான கடமைகள். ஆலய வழிபாடுகள் செய்வது, ஆலயங்களில் தொண்டு செய்வது, பக்தர்களுக்கு, துறவிகளுக்கு, யோகிகளுக்குத் தொண்டு செய்வது, பெற்றவர்களுக்குப் பணிவிடை செய்வது சமுதாய மேம்பாட்டிற்கான தொண்டு போன்ற இவையெல்லாம் கிரியைகள் எனப்படும். நல்லொழுக்கம், நல்ல செயல்கள் உடையவராகும் போது சாதகருக்கு நல்ல எண்ணங்கள் மேம்படும். தீவினைகள் அகலும். சாத்வீகம் மேலோங்கும். தாமஸ,. இரஜோ குணங்கள் அடியோடு நீங்கி விடும். இதுவே உள்முகமானப் பயணத்திற்கு ஏற்ற தருணம். இத்தகைய சாதகனையே யோகம் சாதாரண நிலையிலிருந்து மகோன்னதமான நிலைக்கு எடுத்துச் செல்லும், பரம்பொருளோடு இணைந்திடச் செய்யும். இணைவதற்கு முன் சுவானுபூதியில் உணர்தலே அல்லது அறிதலே ஞானம் எனப்படுகிறது. ஞானத்தில் நிலைத்தவருக்கு முக்தி. அதற்குப் பிறகு எதுவுமில்லை. எனவே நல்வாழ்க்கை என்பது சரியையில் துவங்கி ஞானத்தில் பூர்த்தியாவதாகும். யோகத்தில் துவங்கினால் அது யோகத்தைக் கூடத் தாண்டாது என்பதே உண்மை. மனமது செம்மையானால்....... ................ இங்கு செம்மை என்பது தூய்மையைக் குறிப்பதே. மனம் பரிபக்குவமடைந்து, தூய்மையடைந்தவர்கே தவம் நிலைக்கும். அமுதம் தித்திக்கும். ஞானம் சித்திக்கும். புராணங்கள் நமக்கு பலப்பல யோக இரகசியங்களை உணர்த்தவே இயற்றப்பட்டன.
No comments:
Post a Comment