
எல்லோரும் அவரைப் பார்த்த போது அவர் ஒரு இடத்தை சுட்டிக் காட்டினார். அங்கே யானை சாணம் கிடந்தது. ஒரு பெரிய யானையுடையதும், ஒரு குட்டி யானையுடையதுமாக சாணம் காணப்பட்டது. அதற்கு அருகில் யானை சிறுநீர் கழித்ததற்கான அடையாளமும் காணப்பட்டது. அந்த இடத்திற்கு மேடான பகுதியில் நாங்கள் நின்றிருந்தோம். அருகில் நடைபாதையில் ஒருவர் மோர் விற்பனை செய்து கொண்டிருந்தார். அவரிடம் சென்ற வைத்தியர், ஒரு பாத்திரத்தை வாங்கிக் கொண்டு அந்த சாணம் கிடந்த இடத்திற்கு அருகில் காணப்பட்ட ஊற்றில் இருந்து தண்ணீரைக் எடுத்துக் கொண்டு வந்து, குடிக்கச் சொன்னார். நான், ஐயா சென்ற முறை வந்த போது நாங்கள் இதிலேதான் கால் கழுவினோம். இதைக் குடிக்க வேண்டாம் என்றேன். அவரோ இது கிடைப்பதற்கரிய அமுரியாகும். இதற்காக வனத்திலே சித்தர்கள் காத்துக் கிடப்பார்கள். அவ்வளவு எளிதில் கிடைக்காது. நவக்கிரக தோஷத்தால் ஏற்படும் சகலவிதமான வியாதிகளுக்கும் சித்தர்கள் இந்த அமுரியைக் கொண்டு மருந்து அரைப்பார்கள். இதைக் குடித்தால் நவக்கிரகங்களால் ஏற்பட்டுள்ள தோஷங்கள் விலகும் என்று சொல்லி, ஒரு செம்பு அளவு மடக் மடக் என்று குடித்து விட்டார். சிறிது கூட அருவருப்பு அடையாமல் குடித்தார். எனக்கு வயிற்றை புரட்டியது. வேறு வழியில்லாமல் எல்லோரும் பேருக்கு ஒரு மடக்கு குடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டு விட்டது. தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் ஒரு துர்வாடை வீசியது.
பிறகு அவர் சொன்னார் இது போன்ற வறண்ட காலங்களில் தாய் யானையும் குட்டியானையும் தண்ணீர் குடிக்க வனங்களில் காணப்படும் இதைப் போன்ற சிறிய ஊற்றுகளுக்கு வருமாம். அப்படித் தண்ணீரைக் குடித்து விட்டு சிறிது நேரம் நிற்கும் போது சிறு நீர் கழிக்குமாம். அந்த சிறுநீரானது அதைச் சுற்றி ஒரு 50 மீட்டர் சுற்றளவில் காணப்படும் எல்லா ஊற்றுகளிலும் மண் வழியாகவோ பாறைகள் வழியாகவோ போய் கலந்துவிடுமாம். இது மிகச் சிறந்த அமுரியாகும் என்றார். மேலும் தாயும் சேயும் தனியாக வருவதுதான் முக்கியம் என்றார். அவ்வளவு எளிதில் அது தனியாக வராது என்றார். திருமூலர் அமுரி தாரணை என்று ஒரு பயிற்சியாத் தருகிறார் (845-850). நூறு மில்லி அளவு சிவநீரை(சிறுநீரை) அருந்துவதற்குச் சமமான வேறு மருந்து உலகில் இல்லை என்கிறார். இதோடு மிளகு, நெல்லி, மஞ்சள், வேம்பு கலந்து உண்ண வேண்டும். இது வீரமருந்தாகும். சக்தி அமுதம் என்கிறார்.
வேறு சிலர் குண்டலினி யோகமே அமுரி தாரணையாகும். விந்து(சுக்கிலம்)வை மூலாதாரத்திலிருந்து சகஸ்ராத்துக்கு கொண்டு செல்லும் பயிற்சியே அமுரிதாரணையாகும். மேலே ஏறியவுடன் மிளகு, நெல்லி, மஞ்சள், வேம்பு எல்லாவற்றையும் பாலுடன் அரைத்துக் குளித்தால் மேனி மிருதுவாகும் என்கிறார்கள். இந்த யோகத்தை பெண்களும் கடைபிடிக்கலாம் என்று திருமூலர் சொல்வதாகச் சிலர் கருத்து தெரிவிக்கிறார்கள். பெரும்பாலான சித்தர்கள் அமுரியை மூத்திரநீர் என்று குறிப்பிட்டாலும், யூகிமுனி போன்ற சில சித்தர்கள் அமுரி என்றால் மூத்திரநீர் அல்ல என்றே குறிப்பிடுகின்றனர். அதற்கு ஆதாரமான ஒரு பாடலைப் பாருங்கள்
''லாடியே மனிதர்மூத் திரத்தைத் தானும்
வகையாக அமுரியென்பார் புத்தியில்லார்.''
மேலும்
தானேதான் அமுரியென்று மூத்திரத்தை விட்டுத்
தாட்டிகமாய்ச் சொன்னார்கள் பெரியோர் தாமும்
தானேதான் பொய்பேசு மாண்பர் தம்மைக்
கட்டியே அ(டி)ழித்தாக்கால் பாவமில்லை
வானேதான் மூத்திரந்தான் சமுத்திரநீராம்
வகையாக பார்த்தாக்கால் தோணும் தோணும்.
என்று விளக்கம் தரும் சித்தர் பாடல்களும் காணப்படுகின்றன. பர ரிஷி பெருமான் காயகற்பத்தில் செவ்வாழைக் கன்றமுரி என்று வாழை மரத்து நீரையும் அமுரி என்கிறார். ஒரு பாடலில் வெள்ளாட்டமுரி என்று வெள்ளாட்டின் மூத்திரத்தை குறிப்பிடுகின்றனர். இதிலிருந்து ஒரு விஷயம் தெளிவாகத் தெரிகிறது. அதாவது உப்புத் தன்மை கொண்ட நீர்கள் அனைத்தையும் சித்தர்கள் அமுரி என்று குறிப்பிட்டுள்ளனர். கடல் நீரைக் காய்சிக் குடித்தால் பலவிதமான நோய்கள் தீரும் என்று அகத்தியர் குணபாடநூலில் குறிப்பிட்டுள்ளதை நாம் இங்கு கவனிக்க வேண்டும். அமுரி என்றால் முத்திர நீர் அதாவது சமுத்திரத்தில் உள்ள ச வை நீக்கி விட்டால் முத்திர நீர் என்று மறை பொருளாகச் சொன்னது மூத்திர நீராய் ஆகிவிட்டதோ என்னவோ ? அதாவது வானேதான் மூத்திரம் என்று கடல் நீரைச் சொல்கிறார் அந்தப் பாடலில்.
No comments:
Post a Comment