Wednesday, March 26, 2014

பூரணம் என்றால் குறைவுபடாதது என்று பொருள். மஹத் என்கிற அகண்டாகரம் அல்லது பரம்பொருள் குறைவே இல்லாதது. ஆனால், ஜகத் அவ்வாறு அல்ல. ஒரு இயக்கத்தால் ஓரிடத்தில் குறைவு ஏற்படுவதும், இயற்கையாகி இறையாற்றல் அதை நிறைவு செய்வதுமாக இயக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சில வேளைகளில் குறைவு உடனடியாகச் சரி செய்யப்படுகிறது. சில வேளைகளில் அதற்கு அதிகத் தாமதம் ஏற்பட்டு விடுகிறது. காற்றின் குறைபாடு உடனே சரி செய்யப்படுகிறது. அழுத்தம் உள்ள இடத்திலிருந்து அழுத்தம் இல்லாத இடத்திற்கு உடனே காற்று ஓடி வந்து நிரப்புகிறது. நீர் அவ்வாறு இல்லை மழை வரும் வரைக் காத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் குறை நிவர்த்தியாகும். மாதம் மும்மாரிப் பொழிந்து குறை நிவர்த்தியாகிய காலமும் உண்டு. ஆனால், மனிதனின் இயற்கை விரோதப் போக்கினால் மழை பொய்த்துப் போய் விட்டது. இப்பொழுது வருடம் மும்மாரிப் பொழிகிறது. இது போல மனிதன் செயலிலும், வாழ்விலும் குறை இருந்து கொண்டே இருக்கிறது. அதை சரி செய்வதற்கு அவன் போராடிக் கொண்டே இருக்கிறான். இயற்கையின் செயல்களை அது சரி செய்து கொள்வது போலத் தன் செயல்களைத் திருத்தி குறைகளை நிறைவளாக மாற்றும் திறன் இயற்கையால் மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தத் திறனை அவன் முறையாக, முழுமையாக உபயோகப்படுத்துவதில்லை. எனவே குறை இல்லாத மனிதனைக் காண்பது அரிது.

எனவேதான் எல்லோருமே ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொள்கிறோம். இதை உணர்ந்த நம் முன்னோர்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளத் தக்க வகையில் வாழ்க்கை முறையை அமைத்து வாழ்ந்து நிறைவடைந்தார்கள். அதைத்தான் அறம், தர்மம், சனாதான தர்மம் என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறோம். ஆனால், அத்தகைய அற வாழ்வை வாழ்கிறோமா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கேட்டால் கலிகாலம் என்று ஒரே வரியில் முடித்து விடுவோம். மனிதன் தன்னுடைய கேவலமான மனப்பாங்குகளை மறைக்கப் பயன்படுத்தும் முகமூடிதான் இந்தக் கலிகாலம் என்ற சொல். எல்லாம் மாறி விட்டது என்று சொல்வது கட்டுக் கதை. எதுவும் மாறவில்லை. அன்று நடந்த படியே இயற்கையின் செயல் இன்றும் மாறாமல் நடந்து வருகிறது. சில செயல்கள் மாறி நடப்பதற்குக் காரணம் மனிதனே. மனிதன் தர்மத்தின் வழியினின்று விலகி அதர்மத்தை கை கொண்டு பேராசை, சுயநலம், வஞ்சகம், பொய், களவு போன்ற அநியாயங்களைப் புரிவதால் இயற்கையின் சில விதிகள் மாறி அமைந்து விட்டன. நான் சொல்வது பொய்யல்ல. எத்தனை மலைகளை உடைத்திருந்தால் இத்தனை கற் கோவில்களைக் கட்டியிருக்க முடியும். இன்றளவும் மலைகள் உடைந்து தவிடு பொடி ஆகிக் கொண்டிருக்கின்றன.

மலைகள் மேகத்தை இழுந்து தன்னிடம் வைத்துக் கொண்டு, காற்றை திசை திருப்பி மழை பொழியச் செய்யக் கூடியவை. அத்தகைய இடங்களில் தான் ஊர்கள் அமைந்திருக்கும். மேலும் மலைகளில் உள்ள மரங்கள் மற்றும் தாவரங்களின் வேர்கள் தண்ணீரை தேக்கி வைத்துக் கொண்டு வருடம் முழுவதும் சிறுகச் சிறுக நமக்கு நீர் கிடைக்கும்படிச் செய்யும். மேலும் எத்தனை எத்தனையோ கோடிக் கணக்கான மரங்களை வெட்டி கோவில்கள் வீடுகள் என்று கட்டி வனங்களை அழித்து நகரங்களாக்கி, இப்படி பல்வேறு இயற்கையின் செல்வங்களை பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக அழித்து நாசம் செய்து வந்திருக்கிறான் மனிதன். உடனே சிலர் கோவில் கட்டியது தவறா என்று சண்டைக்கு வரக் கூடும். கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் நல்ல பெரிய மரத்தடியில்தான் ஆதி காலங்களில் சிவ லிங்கமோ மற்ற மூர்தங்களோ அமைந்திருந்தன. அரசர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு நான் வழிபடும் தெய்வம்தான் பெரிது என்று போட்டி போட்டு பெரிய பெரிய ஆலயங்களைக் கட்டினார்கள். இப்படி வந்ததுதான் இப்பொழுது நாம் பார்க்கும் இந்த பிரம்மாண்டமான கோவில்களெல்லாம். நீங்களே விக்ரக வழிபாடு மன ஒருமைப்பாட்டுக்கு உதவும் என்று சொல்லியிருக்கிறார்களே என்று கேட்டால், இப்பொழுதும் அதையேதான் சொல்கிறேன் வழிபாட்டில் தவறில்லை. வழிபடும் முறை அதாவது ஆடம்பரம், பிரம்மாண்டமெல்லாம் மனமதை ஒருமுனைப்படுத்த உதவாது. குடந்தையில் இருக்கும் பொழுது ஒரு கோவிலில் அமாவாசை இரவு கூட்டம் அலை மோதும். அதுவும் பெண்கள் கூட்டம். என்ன காரணம் என்று விசாரித்தால் அதிகமான பெண்கள் விலை உயர்ந்த பட்டுப் புடவையை அப்படியே ஹோமத்தில் போடுகிறார்களாமே ? போடுகிறார்களே ? என்றுதான் சொன்னார்கள். பாருங்கள் எது முன்னிலை வகிக்கிறது என்று.

எனவே நாம் காட்டுகின்ற பிரமண்டமெல்லாம் உண்மையிலிருந்து மனதை விலக்கிப் பிரித்துப் போட்டு விடும். இயற்கையை விட பிரம்மாண்டம் எதுவும் இல்லை. கோவில்களுக்கு பல விஞ்ஞான காரணங்கள், கோவில் இல்லையென்றால் குடியிருக்க வேண்டாம் என்று சொல்வதெல்லாம் சில குறிப்பிட்டவர்கள் பொருளீட்டுவதற்காகச் சொல்லிய புராணங்கள் போன்ற கதைகள். இயற்கையின் பிரம்மாண்டம் நம் மனதை இறைவனிடம் கொண்டு செல்லும். மனிதனின் பிரமாண்டம் நம் மனதை பிரமிக்கச் செய்து உலகப் பொருள் மீது ஆசையும், நாட்டமும் கொள்ளச் செய்யும். இவையெல்லாம் நம் கலாச்சாரத்தை, பண்பாட்டை பின்னால் வருகிறவர்கள் தெரிந்து கொள்வதற்காக செய்யப்பட்ட புனிதமான காரியங்களல்லவா என்று சிந்திக்கக் கூடும். ஆனால், அதற்கு நாம் கொடுத்த விலை பயங்கரமானது. உண்மையைச் சொல்லப் போனால் அந்தக் கலாச்சாரங்கள் எதுவும் இப்பொழுது நடைமுறையில் இல்லை. எத்தனையோ கோவில்கள் இடிக்கப்பட்டன. கவனிப்பாரின்றி மண்ணோடு மண்ணாகப் புதைந்து போயின. இவையெல்லாம் மன்னர்களின் ஆடம்பரம் மற்றும் தற்பெருமையை உணர்த்தும் சின்னங்களேயன்றி கலாச்சாரத்தை உணர்த்தும் சின்னங்களல்ல. எதிரி நாட்டு மன்னர்களிடமிருந்து ஒளிந்து கொள்வதற்காகவும், போர்க் கருவிகளை மறைத்து வைக்கவும் கூட பெரிய பெரிய கோவில்களைக் கட்டியிருக்கிறார்கள். என்னவாயிற்று பல மலைகளும், மரங்களும் சரிந்தது போல இவர்கள் சாம்ராஜ்ஜியமும் சரிந்து அழிந்து போனது. இது போல பல இயற்கை வளங்களை நாம் சிறுகச் சிறுக இழந்து இன்று நம்மை ஆள்கின்ற அரசே எங்கள் தேசத்தை வறட்சிப் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று சொல்கிற நிலைக்கு வந்து விட்டோம். ஓரிரு சித்தர்களைத்தவிர மற்ற சித்தர்கள் எல்லோருமே ஆகமங்களுக்கும், கோவில், விக்கிரக வழிபாட்டுக்கும் எதிர்ப்பு தெரிவித்தற்கான அடிப்படைக் காரணமும் இதுதான். நிறைவு செய்யும் இயற்கையின்(இயல்+கை) கையை ஒடித்து விட்டதினால்தான் மனிதன் தன் இயல்பை இழந்து குறைவுபட்டவனாகவே வாழ்ந்து மடிகிறான்.

No comments:

Post a Comment