Wednesday, March 26, 2014

நம் முன்னோர்கள், ஆட்டையும் மாட்டையும் ஏன் வீட்டில் வளர்க்கப் பிரியப் பட்டார்கள். மாமிசம் உண்ணுபவன் அதற்காக வளர்த்தார்கள் என்பான். வேறொருவன் பால் குடிக்க வளர்த்தார்கள் என்பான். ஆனால் அவர்களின் சூக்கும அறிவு வேறு விதமானது. அதைப் புரிந்து கொள்ள இன்னும் கூர்மையான அறிவு வேண்டும். அதற்கு புலன்களில் சலனமற்ற நிலை வேண்டும். எண்ணங்கள் தெளிந்த நீர்நிலை போல் இருக்க வேண்டும். இருந்தால் உண்மையை அது கண்ணாடி போலக் காட்டும். மற்ற விலங்குகளைக் காட்டிலும் இவை சாத்வீகமாகக் காணப்படுகின்றன. சுத்த சைவமாகத் திகழ்கின்றன. வள்ளல் தன்மையுடன் விளங்குகின்றன. பால் கொடுக்கிறது, உரம் கொடுக்கிறது, ஏர் உழுகிறது. எல்லாவற்றிற்கும் மேலான ஒரு விஷயம் அது ம்ம என்று கத்துவதுதான். ம என்றால் உலக ஞானம். ம் என்றால் உயிர் ஞானம். இந்த ம் என்கிற நாதம்தான் உலகம் எங்கும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. மனித சஞ்சாரமற்ற அமைதியான சூழலில் இந்த உயிர் நாதம் கேட்டுக் கொண்டே இருக்கும். அதனால்தான் சித்தர்கள் மனித சஞ்சாரமற்ற இயற்கைச் சூழலைத் தேடிப் போனார்கள்.

இந்த உயிரின் ஓசையை செவிடன் கூடத் தெளிவாகக் கேட்க முடியும். ஆனால் நமக்கு அந்த பாக்கியம் இல்லை. இரைச்சலிலேயே பிறந்து இரைச்சலிலேயே சாக வேண்டியதுதான். அடுத்த பிறவியிலாவது செவிடாகப் பிறக்கும் படிக்கு வேண்டிக் கொள்ளுங்கள். ஏனென்றால் உயிரின் நாதம் உடலுக்குள் ரீங்காரம் செய்து கொண்டே இருக்கும். ரிங்காரம் என்பதுவும் ஓம்காரம் என்பதுவும் ம் தான். ம் என்ற சுருதியே ஸ்மிருதியாக(வேதமாக) விளங்குகிறது. இது மௌன வார்த்தை. மௌன மந்திரம். இதையே வாய் திறந்து சொல்லும் போது ஓம், ராம், லாம், யாம், வாம். உன்னுடைய உயிரை, நீ யார் என்று உணர்த்தும் வேதம் என்ற சொல்லின் முடிவு ம் தான். சுக்கிலம் வலு இல்லை என்றால் கவனம் இருக்காது. கவனம் இல்லாதவனுக்கு நாதம் கேட்காது. சரீர கவனம் அற்றுப் போனால் மரணம்தான். ஆனால் நீ உயிரைக் கவனிக்கும் போது உனது சரீரத்தை அது கவனித்துக் கொள்ளும். இந்த இரண்டையும் யார் கவனிப்பது. அதுதான் நாதம். அந்த ஒன்றுக்கும் மற்றொன்றுக்கும் உள்ள சூட்சுமத் தொடர்புதான் ம்(நாதம்).
உயிர்கள் அனைத்தும் சொல்லாமல் சொல்லும் மந்திரம், வாய் புதைந்த மந்திரம் ம். அதைச் சொல்லிக் கொண்டே இருப்பதால்தான் ஆடு, மாடுகளுக்கு முக்கியத்துவம்.

கருவறையை விட்டு வெளியே வரும் பிள்ளை உள்ளே இருந்தது பத்துமாத தவம். பாற்கடலில் பரந்தாமன் யோக நித்திரை கொள்வது போல் பனிக்குடத்துக்குள், நீருக்குள் யோக நித்திரையில் ஆழ்ந்திருக்கும். சுக்கில சுரோணிதங்கள் தேகமாய் உருவெடுக்கும் வரை முட்டைக்குள் பொருமையாகக் காத்திருக்கும். பூரண தேகம் பெற்ற பிறகோ பூமிக்கு வருவதற்கு அழைப்பை எதிர் நோக்கி தவமிருக்கும். எல்லோரும் தவமாய் தவமிருந்து பெற்ற பிள்ளை என்பார்கள். உண்மையில் எல்லோரும் தவமாய் தவமிருந்து பிறந்த பிள்ளைகள்தான். அது பிறந்த உடன் வாரி அனைத்துக் கொள்ள ஆயிரம் கரங்கள் காத்திருந்த போதிலும்(சொந்தங்கள்), அதன் ஒரே எதிர் பார்ப்பு தாயின் கரங்கள் மட்டுமே. பாசத்தை அறியவும், பசியைப் போக்கவும் அந்த கரங்களால்தான் இயலும். அதன் பசிக்கும், ருசிக்கும் பக்குவமான அமுது அங்கே ஊறிப் பெருகும். அந்தத் தாயின் அன்பிலும், அமுதின் ருசியிலும் சரீரம் உருவான விதத்தையும், தன் தவத்தையும் அது மறந்து போகும்.

சரீரம் உருவான இரகசியம் அனைத்து ஜீவ ராசிகளுக்கும் தெரிந்த விஷயமதான் என்றாலும், அது மறைக்கப்பட்டது. மறக்கப்பட்டது. வெறும் சுக்கில சுரோணிதம் சரீரம் ஆகாது. அதைப் பக்குவப்படுத்த உள்ளே தவம் செய்ததைப் போல, மனிதன் சுக்கில பலத்தை உண்டாக்கிக் கொண்டு, கைகால் அடக்கம், மன அடக்கம், வாயடக்கம் கொண்டு தான் உயிர் என்று உணர்ந்த நிலையில், சரீர அஹங்காரம் அற்ற நிலையில் தாயின் கருவறையில் இருந்ததற்கு ஒப்பாய் தவத்தில் நின்றால், நீ இருக்கும் குகையிலும் நாதம் கேட்டும். வலம்புரியைக் காதில் கவிழ்த்து வைத்தது போல நாதம் கேட்கும். அந்த நாதமே உலகுக்கு உயிர். அதுவே ஓம். எல்லா சத்தத்திற்கும் அடிப்படை ம். அந்த சுதியிலேயே மனதை வசப்படுத்து, நீ சாவதில்லை.

No comments:

Post a Comment