Wednesday, March 26, 2014

நமது உடலின் மீது இயற்கை புலன்கள் வாயிலாக எப்போதும் ஆளுமை செய்து கொண்டேயிருக்கிறது. மனிதனின் மனமும் எண்ணங்களும் அதன் அடிப்படையில்தான் இயங்குகின்றனவே அல்லாது பிரபஞ்சத்தின் சூக்குமங்களை அவனை அறியவிடாமல் புலன்களின் செயல்களிலேயே அவனை மூழ்கடித்து விடுகிறது. நம்முடைய உடலுக்கும் இந்தப் பிரபஞ்சத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பிரபஞ்சத்தின் இயக்கங்கள் அனைத்தும் நம் ஸ்தூல தேகத்தில் சூக்குமமாக இயங்கிக் கொண்டே இருக்கிறது. இதைத்தான் அண்டத்தில் உள்ளது பிண்டத்தில் என்று சொல்வார்கள். என்றாலும் சித்தர்கள் நம் உடலையே மூன்று பிரிவுகளாகவும் காண்கிறார்கள். அது எவ்வாறு எனில், அண்டம், பிண்டம், தொண்டம் என்பதாகும். அதாவது, அண்டமாகிய சிரசையும் பிண்டமாகிய உடலையும் இணைக்கும் கழுத்துப் பகுதியே தொண்டம். பிரபஞ்சத்தின் இயக்கம் இந்த மூன்று பகுதிகளிலும் ஒன்று சேர இயங்குவதில்லை. தனித்தனியே பிரிந்து இயங்குகின்றன. இவற்றை ஒருங்கிணைக்க நம் சித்தர்கள் கண்ட வழிமுறையே யோகம்.

கழுத்துக்கு மேலே உள்ள சிரசு அண்டம் எனப்படும். இதிலே கண், மூக்கு, செவி, நாக்கு, பொருமூளை என்கிற சகஸ்ராரம், சிறுமூளை, உச்சிஸ்தானம் என்றழைக்கப்படும் பிரம்மரந்திரம், அண்ணாக்கு எனப்படும் சிறுநாக்கு மற்றும் ஞான இந்திரியங்கள் எனப்படும் சப்த, ஸ்பரிச, ரூப, ரச, கந்தமும் இதிலே அடக்கம். உற்றுப் பார்த்தால் பஞ்ச இந்திரியங்களும் இதில் அடங்கியுள்ளது. அந்தகரணங்கள் எனப்படும் மனம், புத்தி, சித்தம், அகங்காரம் இவை யாவும் இங்கிருந்துதான் பஞ்ச புலன்களின் வழியாக செயல்படுகின்றன. மனிதனின் ஓய்வில்லாத எண்ண அலைகளும் இங்கிருந்துதான் உதயமாகின்றன. இதை மேல் மனம் என்று சொல்வதுவும் உண்டு. பரமாத்மாவின் இருப்பிடமும் சிரசின் மத்திய பாகத்தில் பிரம்மரந்திரத்தில் உள்ளது. அதை ஆத்ம லிங்க ஸ்தானம் என்பார்கள். சித்தாகாசம் மற்றும் பரமாகாசம் இங்குதான் உள்ளது. பிரபஞ்சத்தின் அதிசூக்குமமான சக்திகள் அனைத்தும் அண்டப் பகுதியில் அடக்கம். யோகத்தில் நம் சக்தியானது கீழி இருந்து மேல் நோக்கி ஏற வேண்டும். அதாவது பிண்டத்தையும் தொண்டத்தையும் ஒருங்கிணைத்து, அந்த சக்தியை அண்டத்தோடு இணைக்க யோகம் வெற்றியாகும்.

அடுத்ததாக நம் கழுத்துக்கு கீழ் உள்ள பகுதியான பிண்டத்தில் இதயம், நுரையீரல், கல்லீரல், மண்ணீரல், உணவுக்குழாய், வயிறு, உதரவிதானம்,குடல், நாபி, குதம், குய்யம் என்று அனேக உருப்புகள் அடங்கி உள்ளன. இதில் நடுமையமாக நாபி விளங்குகிறது. நாபி, குதம், குய்யம் இம்மூன்றும் இணைந்த முக்கோண ஸ்தானமே அக்னிகுண்டம். இங்குதான் இரத்தம் உற்பத்தியாவதாகச் சொல்லப்பட்டுள்ளது. கீழ்மனச் செயல்களாகிய தேகப்பற்று, மலக்குற்றங்கள், வினை நுகர்வுகள் ஆகிய எல்லாம் கூடிய மாய மலங்கள் யாவும் செயல்படுவது பிண்டத்திலே. பசி, தாகம், மலம், மூத்திரம், சளி போன்ற உபாதைகள் மற்றும் கர்பத்தில் உருவாகும் பிண்டத்தின் உற்பத்தி மற்றும் அழிவுக்குக் காரணமாய் விளங்கும் ஜாடாராக்கினியும் பிண்டத்தில்தான் செயல்படுகிறது. மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம் ஆகிய சக்கரங்களின் ஆளுமையில் பிண்டம் இயங்குகிறது.

நம் கழுத்துப்பகுதியே தொண்டம் எனப்படுகிறது. அண்டத்தையும் பிண்டத்தையும் இணைத்தாலும், இரண்டையும் பிரித்து தனித்தனியே இயங்க வைப்பது தொண்டமே. யோகத்தில் இரண்டையும் இணைக்கும் இணைப்பு சக்தி தொண்டமே. எனவே இதை ஜீவ பிரம்ம ஐக்கிய ஸ்தானம் என்று சித்தர்கள் கூறுவார்கள். விசுத்திச் சக்கரம் மற்றும் தைராய்டு சுரப்பி தொண்டப்பகுதியில்தான் அமைந்துள்ளது. மனிதனின் பேசும் சக்தியின் ஸ்தானமாக விளங்குகிறது. மனிதனின் பிரபஞ்ச ஆராய்ச்சி இங்கிருந்துதான் தொடங்குவதாக யோகநூல்கள் யாவும் கூறுகின்றன. யோக சாதனையில் பூத வாக்கு மறைந்து அருள் வாக்கு தோன்றுவதும் இங்குதான். இதைத்தான் கண்ட சித்தி அல்லது ஶ்ரீகண்டம் என்பார்கள். தோள்கண்டம், நீள்கண்டம் இரண்டின் இணைப்பே ஶ்ரீகண்டம். அதாவது கண்டம் என்றால் துண்டுபட்டது என்பார்கள். அகண்டம் என்றால் துண்டுபடாதது. அதனால்தான் எல்லையற்ற பெருவெளியை அகண்டாகாரம் என்பார்கள். சௌந்தர்ய லஹரியில் தொண்டம் மத்தியமா எனச் சொல்லப்பட்டுள்ளது. தோள் கண்டம் என்பது ஆக்ஞா ஸ்தானம். நீள்கண்டம் என்பது விசுத்தி ஸ்தானம். விசுத்தி ஸ்தானம் மனிதனுக்கு மேன்மை அளிக்கும் இடமாகும். இது அண்ணாக்குக்கு கீழ்பகுதியில் அமைந்துள்ளது. பூத வாக்காக கண்ட த்வனியாக, பேசும் சக்தியாக இயங்கி மனிதனுக்கு சத்ருவாக இருக்கம் நீள்கண்டம், யோகத்தில் அருள் வாக்காக மாறி கண்ட த்வனி அழிந்து அநாகத த்வனி தோன்றுகிறது. எனவே இதை வினை தாண்டிய இடம் என்பர்.

தோள் கண்டம், ஜடமனம் எனப்படும் ஆக்ஞாவின் தலைப்பகுதி நெற்றியின் நடுமையம், கால் பகுதி நெஞ்சுக் குழி. இந்த நெஞ்சுக் குழியில் இருந்தே மும்மலங்களாகிய வாதம், பித்தம், கபம் மற்றும் தசவாயுக்களின் பிரிவினை, மும்முடிச்சாகிய சத்வம், ராஜசம், தாமசம் என்கிற முக்குணங்களின் பிரிவினை யாவும் செயல்படுகின்றன. ஆக்ஞாவின் தலைப் பகுதியாகிய நெற்றியின் நடு மைய ஸ்தானத்தில் மனிதனின் மூன்று நிலைகளாகிய விழிப்பு நிலை, கனவு நிலை, உறக்க நிலை தோன்றி மனிதனை நிலை தடுமாறச் செய்கின்றன. மனிதனை நான்காவது நிலையாகிய துரியநிலையை அடைய விடாமல் தடுப்பது ஆக்ஞாவே. ஒவ்வொரு சுவாசத்தையும் பிராணன், மனம் என இரண்டாகப் பிரித்துவிடுவது ஆக்ஞாவின் வேலையே. எனவேதான் இதை ஜென்மத்திரை என்பார்கள். ஆணவ நினைவும் அகங்காரத்தின் வசிப்பிடம் ஆக்ஞாவே. எனவேதான் ஆக்ஞாவாகிய தோள் கண்டத்தை அவ்வளவு எளிதில் வெல்ல முடியாது. இதன் மாய வலையில் சிக்கித் தவிக்கும் யோக சாதனையாளர்கள் ஏராளம். ஶ்ரீவித்தை வழிமுறையில் சோமக்கலை என்ற சித்தியின் மூலமாகச் சித்தர்கள் ஆக்ஞாவை மூடிவிடுவார்கள். அதன் பின் சித்த விருத்தி ஏற்பட்டு அவர்கள் சோம வட்டத்துக்குள்ளே பிரவேசித்து சோம்பானம் அருந்துவார்கள். கேசரி முத்திரை, கேசரி சித்தி, சோமவட்டம் போன்ற யோகத்தின் வெற்றி வைபவங்களுக் கெல்லாம் தொண்டம்தான் நுழைவு வாயில்.

ஆகாய தத்துவமும் அப்புத் தத்துவமும் தொண்டத்தில் அடக்கம். பொதுவாக மானிடரில் தோள்கண்டத்தையும், நீள்கண்டத்தையும் ஶ்ரீகண்டத்தால் இணைப்பது சாத்தியமில்லாமல் போகிறது. காரணம் கரும வாசனைகள், வினை நுகர்வு, தீ வினை,சஞ்சிதம் இவைகளால் முட்டி மோதி அலைந்து கொண்டே இருப்பதே ஆகும்.மனிதனின் பிராணன் தோள் வளைவுக்குக் கீழே இறங்கி குதம் வரை செல்வதே ஜென்ம சத்ரு எனப்படும். பிறப்பும் இறப்பும் இதனாலேயே ஏற்படுகிறது. இந்த சுழலில் இருந்து அவனால் மீளவே முடிவதில்லை. இதுதான் பிந்து தத்துவம். யோக சாதனையில் அண்ணாக்கிற்கு மேலே ஏறிய பிராணன் மீண்டும் தோள் கண்டத்திற்கு கீழே இறங்காமல் நிற்பதே ஶ்ரீகண்டம். இதுவே நாத தத்துவம். எனவே மூன்றாகப் பிரிந்து நிற்கும் சக்திகளை இணைத்து ஒன்றாக்கி, ஒன்றி, ஒன்றோடு கலந்து உய்வோமாக.
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன்.

2 comments:

  1. அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி நற்பவி

    ReplyDelete
  2. அனுவை துளைத்து ஏழுகடலை புகுத்தி குறுக தறித்த குறள் என்பதுக்கு இனையாக இப்பதிவு உள்ளது.எளியவரும் புரிந்துகொள்ளும் வகையில் இப்பதிவை அளித்தமைக்கு மிக்க நன்றி. தங்களின் தொண்டு தொடர எல்லாவல்ல இறைவன் துனையிருப்பார்!

    ReplyDelete