Wednesday, March 26, 2014

தியானம் செய்வது என்பது உண்மையில் அருமையான விஞ்ஞான முயற்சியேயாகும். அந்த முயற்சியின் பலனே மெய்ஞானமாகும். ஆனால், நாம் விஞ்ஞானம் என்பது ஏதோ ஆன்மிகத்திற்கு, மெய்ஞானத்திற்கு எதிரானது என்று எண்ணிக் கொள்கிறோம். இன்றைய தீர்மானமான ஒரு விஞ்ஞான முடிவு என்னவென்றால் இங்கே காணப்படுகின்ற எல்லாவற்றிற்கும் அடிப்படை வஸ்து ஒன்றுதான் என்பதே. இதையே வேதாந்தம் வேறு மொழியில் சொன்னது. எல்லாம் ஒன்றுதான் நாம் அறியாமையால் பலவிதமாகக் காண்கிறோம் என்றது. அறியாமை என்றால் அது என்னவோ கெட்ட வார்த்தை என்று எண்ணிக் கொண்டு வேதாந்தம் குப்பை என்கிறோம். அறியப்படாமல் அல்லது அறியாமல் இருப்பது அறியாமை அவ்வளவுதான். அறிவு நமக்கு எல்லாவற்றையும் நுணுக்கி ஒருமையாகவே காட்டத் துடிக்கிறது. அப்படி எல்லாவற்றையும் சுருக்கி அல்லது நுணுக்கி ஒன்றாக்கி ஆராய்ந்து தெளிவதே அறிவு இயல் அதாவது விண் ஞானம். எல்லாமாக இருப்பது விண் என்கிற ஆகாசம். அது பற்றிய ஞானம் விஞ்ஞானம். ஆகாசம் எங்கே இருக்கிறது ? நம்மைச் சுற்றி எல்லா இடத்திலும் இருக்கிறது. என்றாலும் நாம் பார்க்கும்படியாக அது மேல் புறமாகவே காட்சி தருகிறது. எனவே கடவுள் எங்கே இருக்கிறார் என்று கேட்டால் நாம் உடனே ஆகாசத்தைப் பார்க்கிறோம்.

பரம்பொருள் ஆகாசமாகவே காட்சிக்கு வருகிறது. அதைத் தேடிப் போனால் போய்க் கொண்டே இருக்கிறது. அதற்கு ஒரு முடிவோ, எல்லையோ இல்லவே இல்லை. எனவேதான் அடி முடி காண முடியாதவர் என்கிறோம். அது எல்லையற்ற வெட்டவெளியாகும். அந்த ஆகாசத்தில் இருந்த மற்ற பூதங்கள் வந்தன. இதில் ஏகதேசம் இன்றைய நவீன விஞ்ஞானமும் நம் வேதாந்தமும் ஒத்த கருத்துக்களையே முன் வைக்கின்றன. நம் உடலில் இப்படி திட, திரவ, வாயு, ஒளி, ஆகாயமாக விளங்கும் சக்திகளை ஒன்று சேர்க்கும் முயற்சிதான் தியானம். திடப் பொருள் திரவமாகி, திரவம் வாயுவாகி, வாயு ஆகாசமாகி, ஆகாசம் மனமாகி, மனம் ஆன்மாவில் ஒடுங்கி விடுகின்றது. இதுதான் நாம் என்கிற நாம் வந்த வழி. மீண்டும் வந்த வழியே வீட்டிற்குப் போவதற்கான முயற்சியே தியானம். தியானம் என்பது மனதிற்கானப் பயிற்சிதான். மனம் என்கிற போது அது முழுவதும் எண்ணங்களே. எனவே நமது எண்ணங்களைத் தூய்மைப்படுத்தும் முயற்சியாக நாம் நம் உடலில் தத்துவங்களாகத் திகழும் பஞ்ச பூதங்களையும் தூய்மைப்படுத்துகிறோம். அப்படித் தூய்மையடைந்து வரும் போது நிலத் தத்துவத்தை நீரிலும், நீர் தத்துவத்தை நெருப்பிலும், நெருப்பை வாயுவிலும், வாயுவை ஆகாயத்திலும், ஆகாயத்தை மனதிலும், மனதை ஆன்மாவிலும் ஒடுக்கி இணைத்து விடுகிறோம். இதுவே வேதாந்த விஞ்ஞானம்.

நம் உள் அகம் நான்கு தத்துவங்களாக உள்ளது. அதாவது மனம். ஒளியை விட வேகமானது. ஆன்மாவுக்கு நிகரான நுண்ணியத் தன்மையுடையது. இதுதான் சிந்திக்கும் ஆற்றல். எதைக் குறித்து சிந்திக்கிறதோ அதுவாகவே மாறக் கூடியது. இது அடங்காமல் பலவற்றைக் குறித்து இடைவிடாமல் சித்தித்துக் கொண்டே இருக்கின்ற காரணத்தினால்தான் அதன் ஆற்றல் முழுவதும் வீணாகிறது. அடங்கிய மனதின் ஆற்றல் அளவிட்டுக் கூற முடியாதது. அடுத்த தத்துவம் புத்தியாகும். இது விசாரிப்பது, சங்கல்பம் செய்வது என்று சொல்வார்கள். இதுவே அறிவு எனப்படுகிறது. அதாவது மனம் நினைக்கின்றது, புத்தி அதை விசாரிக்கின்றது, அதைக் கொண்டு மேலும் மேலும் எண்ணங்களை எழுப்புவது அஹங்காரம். இதை நான் என்கிற உணர்வு என்பார்கள். இதைச் செய்து முடிப்பது சித்தம். மற்ற எல்லாவற்றின் செயல்களும் எதன் மூலம் நடைபெறுகின்றதோ அதுவே சித்தம். அதாவது சித். இதுவே மனதின் அடித்தளம். இது கடல் போன்றது. எண்ணம் என்கிற அலைகள் அடிக்கிற கடல் இதுதான். இப்பொழுது இந்த சித்தம் பல்வேறு எண்ணங்களாக அலையடிக்காமல் தடுப்பதற்கான விஞ்ஞான முயற்சியே யோகம் வேறொன்றுமில்லை. ஆன்மாவானது சித்தத்தில் பிரதிபலித்து, அதன் எண்ண அலைகளில் அதன் பிம்பம் பல துண்டுகளாகி மேலும் பல எண்ணங்களாக எழுகிறது. யோகத்தின் பலனால் சித்தம் தெளிந்து அலையடிக்காமல் அமைதியடையும் பொழுது, சித்தத்தில் ஆன்மா பூரணச் சந்திரனாய் பிரிதிபலிக்கின்றது. இதுவே அறிவொளி, பேரொளி, ஞானம் என்று பலவாறாகச் சொல்லப்படுகிறது. ''பூரணமே தெய்வமென்று உரைத்தாரய்யா'' என்று சித்தர் சித்தம் தெளிதலைகப் குறித்து பாடியது இதைத்தான். அதாவது ஆன்மா உணரப்படுகிறது. பிரிதிபலிப்பது, உணரப்படுவது ஞானம். அதற்குப் பிறகு ஞானியின் நிலையில் நிலைத்து நின்று அடைவது முக்தி. எனவே விண் ஞானத்தால்தான் மெய் ஞானத்தை அடைய முடியும் என்பதை உணர்க.

No comments:

Post a Comment