Showing posts with label Life. Show all posts
Showing posts with label Life. Show all posts

Wednesday, March 26, 2014

பூரணம் என்றால் குறைவுபடாதது என்று பொருள். மஹத் என்கிற அகண்டாகரம் அல்லது பரம்பொருள் குறைவே இல்லாதது. ஆனால், ஜகத் அவ்வாறு அல்ல. ஒரு இயக்கத்தால் ஓரிடத்தில் குறைவு ஏற்படுவதும், இயற்கையாகி இறையாற்றல் அதை நிறைவு செய்வதுமாக இயக்கம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. சில வேளைகளில் குறைவு உடனடியாகச் சரி செய்யப்படுகிறது. சில வேளைகளில் அதற்கு அதிகத் தாமதம் ஏற்பட்டு விடுகிறது. காற்றின் குறைபாடு உடனே சரி செய்யப்படுகிறது. அழுத்தம் உள்ள இடத்திலிருந்து அழுத்தம் இல்லாத இடத்திற்கு உடனே காற்று ஓடி வந்து நிரப்புகிறது. நீர் அவ்வாறு இல்லை மழை வரும் வரைக் காத்திருக்க வேண்டும். அதற்குப் பிறகுதான் குறை நிவர்த்தியாகும். மாதம் மும்மாரிப் பொழிந்து குறை நிவர்த்தியாகிய காலமும் உண்டு. ஆனால், மனிதனின் இயற்கை விரோதப் போக்கினால் மழை பொய்த்துப் போய் விட்டது. இப்பொழுது வருடம் மும்மாரிப் பொழிகிறது. இது போல மனிதன் செயலிலும், வாழ்விலும் குறை இருந்து கொண்டே இருக்கிறது. அதை சரி செய்வதற்கு அவன் போராடிக் கொண்டே இருக்கிறான். இயற்கையின் செயல்களை அது சரி செய்து கொள்வது போலத் தன் செயல்களைத் திருத்தி குறைகளை நிறைவளாக மாற்றும் திறன் இயற்கையால் மனிதனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால், அந்தத் திறனை அவன் முறையாக, முழுமையாக உபயோகப்படுத்துவதில்லை. எனவே குறை இல்லாத மனிதனைக் காண்பது அரிது.

எனவேதான் எல்லோருமே ஒருவரை ஒருவர் குறை சொல்லிக் கொள்கிறோம். இதை உணர்ந்த நம் முன்னோர்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளத் தக்க வகையில் வாழ்க்கை முறையை அமைத்து வாழ்ந்து நிறைவடைந்தார்கள். அதைத்தான் அறம், தர்மம், சனாதான தர்மம் என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறோம். ஆனால், அத்தகைய அற வாழ்வை வாழ்கிறோமா என்றால், இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். கேட்டால் கலிகாலம் என்று ஒரே வரியில் முடித்து விடுவோம். மனிதன் தன்னுடைய கேவலமான மனப்பாங்குகளை மறைக்கப் பயன்படுத்தும் முகமூடிதான் இந்தக் கலிகாலம் என்ற சொல். எல்லாம் மாறி விட்டது என்று சொல்வது கட்டுக் கதை. எதுவும் மாறவில்லை. அன்று நடந்த படியே இயற்கையின் செயல் இன்றும் மாறாமல் நடந்து வருகிறது. சில செயல்கள் மாறி நடப்பதற்குக் காரணம் மனிதனே. மனிதன் தர்மத்தின் வழியினின்று விலகி அதர்மத்தை கை கொண்டு பேராசை, சுயநலம், வஞ்சகம், பொய், களவு போன்ற அநியாயங்களைப் புரிவதால் இயற்கையின் சில விதிகள் மாறி அமைந்து விட்டன. நான் சொல்வது பொய்யல்ல. எத்தனை மலைகளை உடைத்திருந்தால் இத்தனை கற் கோவில்களைக் கட்டியிருக்க முடியும். இன்றளவும் மலைகள் உடைந்து தவிடு பொடி ஆகிக் கொண்டிருக்கின்றன.

மலைகள் மேகத்தை இழுந்து தன்னிடம் வைத்துக் கொண்டு, காற்றை திசை திருப்பி மழை பொழியச் செய்யக் கூடியவை. அத்தகைய இடங்களில் தான் ஊர்கள் அமைந்திருக்கும். மேலும் மலைகளில் உள்ள மரங்கள் மற்றும் தாவரங்களின் வேர்கள் தண்ணீரை தேக்கி வைத்துக் கொண்டு வருடம் முழுவதும் சிறுகச் சிறுக நமக்கு நீர் கிடைக்கும்படிச் செய்யும். மேலும் எத்தனை எத்தனையோ கோடிக் கணக்கான மரங்களை வெட்டி கோவில்கள் வீடுகள் என்று கட்டி வனங்களை அழித்து நகரங்களாக்கி, இப்படி பல்வேறு இயற்கையின் செல்வங்களை பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாக அழித்து நாசம் செய்து வந்திருக்கிறான் மனிதன். உடனே சிலர் கோவில் கட்டியது தவறா என்று சண்டைக்கு வரக் கூடும். கூர்ந்து கவனித்தீர்கள் என்றால் நல்ல பெரிய மரத்தடியில்தான் ஆதி காலங்களில் சிவ லிங்கமோ மற்ற மூர்தங்களோ அமைந்திருந்தன. அரசர்கள் தங்களுக்குள் சண்டையிட்டுக் கொண்டு நான் வழிபடும் தெய்வம்தான் பெரிது என்று போட்டி போட்டு பெரிய பெரிய ஆலயங்களைக் கட்டினார்கள். இப்படி வந்ததுதான் இப்பொழுது நாம் பார்க்கும் இந்த பிரம்மாண்டமான கோவில்களெல்லாம். நீங்களே விக்ரக வழிபாடு மன ஒருமைப்பாட்டுக்கு உதவும் என்று சொல்லியிருக்கிறார்களே என்று கேட்டால், இப்பொழுதும் அதையேதான் சொல்கிறேன் வழிபாட்டில் தவறில்லை. வழிபடும் முறை அதாவது ஆடம்பரம், பிரம்மாண்டமெல்லாம் மனமதை ஒருமுனைப்படுத்த உதவாது. குடந்தையில் இருக்கும் பொழுது ஒரு கோவிலில் அமாவாசை இரவு கூட்டம் அலை மோதும். அதுவும் பெண்கள் கூட்டம். என்ன காரணம் என்று விசாரித்தால் அதிகமான பெண்கள் விலை உயர்ந்த பட்டுப் புடவையை அப்படியே ஹோமத்தில் போடுகிறார்களாமே ? போடுகிறார்களே ? என்றுதான் சொன்னார்கள். பாருங்கள் எது முன்னிலை வகிக்கிறது என்று.

எனவே நாம் காட்டுகின்ற பிரமண்டமெல்லாம் உண்மையிலிருந்து மனதை விலக்கிப் பிரித்துப் போட்டு விடும். இயற்கையை விட பிரம்மாண்டம் எதுவும் இல்லை. கோவில்களுக்கு பல விஞ்ஞான காரணங்கள், கோவில் இல்லையென்றால் குடியிருக்க வேண்டாம் என்று சொல்வதெல்லாம் சில குறிப்பிட்டவர்கள் பொருளீட்டுவதற்காகச் சொல்லிய புராணங்கள் போன்ற கதைகள். இயற்கையின் பிரம்மாண்டம் நம் மனதை இறைவனிடம் கொண்டு செல்லும். மனிதனின் பிரமாண்டம் நம் மனதை பிரமிக்கச் செய்து உலகப் பொருள் மீது ஆசையும், நாட்டமும் கொள்ளச் செய்யும். இவையெல்லாம் நம் கலாச்சாரத்தை, பண்பாட்டை பின்னால் வருகிறவர்கள் தெரிந்து கொள்வதற்காக செய்யப்பட்ட புனிதமான காரியங்களல்லவா என்று சிந்திக்கக் கூடும். ஆனால், அதற்கு நாம் கொடுத்த விலை பயங்கரமானது. உண்மையைச் சொல்லப் போனால் அந்தக் கலாச்சாரங்கள் எதுவும் இப்பொழுது நடைமுறையில் இல்லை. எத்தனையோ கோவில்கள் இடிக்கப்பட்டன. கவனிப்பாரின்றி மண்ணோடு மண்ணாகப் புதைந்து போயின. இவையெல்லாம் மன்னர்களின் ஆடம்பரம் மற்றும் தற்பெருமையை உணர்த்தும் சின்னங்களேயன்றி கலாச்சாரத்தை உணர்த்தும் சின்னங்களல்ல. எதிரி நாட்டு மன்னர்களிடமிருந்து ஒளிந்து கொள்வதற்காகவும், போர்க் கருவிகளை மறைத்து வைக்கவும் கூட பெரிய பெரிய கோவில்களைக் கட்டியிருக்கிறார்கள். என்னவாயிற்று பல மலைகளும், மரங்களும் சரிந்தது போல இவர்கள் சாம்ராஜ்ஜியமும் சரிந்து அழிந்து போனது. இது போல பல இயற்கை வளங்களை நாம் சிறுகச் சிறுக இழந்து இன்று நம்மை ஆள்கின்ற அரசே எங்கள் தேசத்தை வறட்சிப் பிரதேசமாக அறிவிக்க வேண்டும் என்று சொல்கிற நிலைக்கு வந்து விட்டோம். ஓரிரு சித்தர்களைத்தவிர மற்ற சித்தர்கள் எல்லோருமே ஆகமங்களுக்கும், கோவில், விக்கிரக வழிபாட்டுக்கும் எதிர்ப்பு தெரிவித்தற்கான அடிப்படைக் காரணமும் இதுதான். நிறைவு செய்யும் இயற்கையின்(இயல்+கை) கையை ஒடித்து விட்டதினால்தான் மனிதன் தன் இயல்பை இழந்து குறைவுபட்டவனாகவே வாழ்ந்து மடிகிறான்.
இந்த உலகம் முழுவதும் வியாபித்திருப்பது எது ? அது பிராணன்தான். அதுவே நம் உடலிலும் பிராணனாக இயங்குகிறது. எண்ணையை வாங்கி எரிகின்ற தீபம் போலக் காற்றிலுந்தும், உண்ணும் உணவிலிருந்தும், பருகும் நீரிலிருந்தும் பிராணனை எடுத்துக் கொண்டு நம் உடல் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்தப் பிராணனைஅதிகமாகப் பெற்றுக் கொள்ள நமக்கு உள்ள ஒரே வழி சுவாசம் மட்டுமே. இந்த சுவாசத்தை நிகழ்த்துவது எது என்று கேட்டால், அது நுரையீரலாகும். நாம் சுவாசிப்பதால் நுரையீரல் இயங்குகிறது என்று எண்ணினால் அது தவறாகும். நுரையீரலின் இயக்கத்தால்தான் சுவாசம் நடை பெறுகின்றது என்பதே உண்மையாகும். நுரையீரலானது தன் இயக்கத்தின் மூலம் காற்றை உறிஞ்சுவதே சுவாசமாக நடைபெறுகின்றது. நுரையீரலுக்கு அத்தகைய அசைவைத் தருவது பிராணனே. அப்படிப்பட்ட நுரையீரலின் அசைவுகளை உருவாக்கும் தசைகளின் செயல்களைக் கட்டுப்படுத்தி தன் வசப்படுத்துவதையே பிராணாயாமம் என்பார்கள். இதனால் என்ன பயன் என்று கேட்கக் கூடும். தசைகளுக்கு என்று ஒரு வலிவு இருக்கிறது. நாடி, நரம்புகள் வாயிலாக அவ்வலிவு நுரையீரலை எட்டுகிறது. அதன் பிறகு நுரையீரல் காற்றை உறிஞ்சுவதற்கேற்ற வகையில் இயங்குகிறது. அப்படி இயங்கச் செய்யும் சக்தி பிராணனேயாகும். அதாவது பல இயக்கங்களின் நிமித்தம் குறைவு படும் தன் சக்தியை நிறைவு செய்து கொள்ள அது நுரையீரலைத் தூண்டி சுவாசத்தை நிகழ்த்துகிறது.

இப்படி உடலின் கண் நடைபெறுகின்ற அனைத்து இயக்கங்களுக்கும் அடிப்படையாக இருப்பது பிராணனே. நுரையீரலின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவதாகிய பிராணாயாமத்தின் மூலம் அந்தப் பிராணனை வசப்படுத்தி விட்டால் உடலின் அனைத்து இயக்கங்களையும் நம் வசப்படுத்தி விடலாம். சில மனிதர்களைப் பார்க்கிறோம், அவர்கள் தங்கள் இஷ்டத்திற்கு உடலில் உள்ள தசைகளை அசைத்துக் காட்டுவார்கள். அப்படிக் குறிப்பிட்ட சில தசைகளை மட்டுமே தன் வசப்படுத்தி அசைக்க முடியும் என்கிற பொழுது உடலிலுள்ள மொத்த தசைகளையும் நம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும்தானே. விலங்குகள் காதை அசைக்கின்றன. உடலை அசைக்கின்றன. யானை காதை அசைப்பதோடு மூக்காகிய தும்பிக்கையையும் அசைக்கிறது. நாமும் விலங்காக இருந்த போது இவற்றையெல்லாம் அசைத்திருந்தோம். இப்பொழுதும் முயற்சி செய்தால் நம்மால் நம் உடலில் நடை பெறுகின்ற அனைத்து இயக்கங்களையும் வசப்படுத்தி, அனைத்து உறுப்புகளையும் அசைக்க முடியும். அனிச்சை செயல்களாகிய இதயத் துடிப்பு, ஜீரண இயக்கங்கள், இரத்த ஓட்டம், சுவாசம் போன்ற பல அனிச்சை செயல்களையும் தன்னிச்சை செயல்களாக மாற்றிக் கொள்ள முடியும்.

இதன் மூலம் நடைபெறும் மாற்றம் என்ன என்று கேட்டால், பிராணனானது ஸ்தூலமாகவும், சூக்குமமாகவும் இயங்குகிறது. சூக்கும நிலையிலிருக்கும் பிராணனை வசப்படுத்துவதற்கு முன்பு ஸ்தூல நிலையில் உள்ள பிராணனின் இயக்கங்களை வசப்படுத்திப் பழக வேண்டும். அதற்குப் பிறகு அதி சூக்கும நிலையில் உள்ள பிராணனை வசப்படுத்துதல் எளிதாகும். பிராணனை முற்றிலும் வசப்படுத்துவதன் மூலம் உடல் மற்றும் மனம் முற்றிலுமாக நம் வசப்பட்டு விடும். அதி சூக்கும நிலையில் உள்ள பிராணனைக் கட்டுப்படுத்த வல்லமை உள்ளவர்களுக்கு நுரையீரல் இயங்காவிடினும், சுவாசிக்காமலே உயிர் வாழ முடியும். பல நாட்கள் பூமிக்கு அடியிலேயே சுவாசிக்காமல் அவர்களால் இருக்க முடியும். இதனால் ஆகிற பயன் என்னவென்றால் நம் மனம் மற்றும் உடலின் பல இயக்கங்களை நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து யோக சாதனங்களைப் புரிவதற்கு எளிதாக இருக்கும். பிராணாயாமம் மூலம் உடல் முழுவதும் பிராணனை வியாபகம் ஆகும் படிச் செய்வதால் நோய்கள் வராமல் காத்துக் கொள்ளலாம். மனம் சஞ்சலமடையாமல் அமைதியாகத் திகழும்படிக்குச் செய்யலாம். இப்படி நம் மொத்த உடலையும் பிராணாயாமத்தால் நம் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரும் பொழுது இந்தப் பிரபஞ்சம் எங்கும் வியாபித்திருக்கும் பிராணன் வேறு நம் உடல் வேறு என்கிற வேற்றுமை நிலை மறைந்து விடும். உடலெங்கும் வியாபகமாகி இருக்கும் பிராணனை வசப்படுத்த முடிந்தவனால் அதன் பகுதியாகிய வெளியில் நிரம்பி இருக்கும் பிராணனையும் வசப்படுத்த முடியும். இதுவே யோக சித்தி. இவர்களுக்கு ஆகாத காரியம் எதுவுமில்லை என்கிற போது முக்தி அடைவதற்கு வேறு தடை ஏதும் இருக்க முடியுமா என்ன ?